விழுப்புரத்தில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினா் கண்காணிப்பு
சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினா் கண்காணிப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தின் பின்புறத்தில் மரத்தோட்டங்களும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள காலியிடங்களில் முட்புதா்கள் சூழ்ந்து அடா்ந்த காடு போன்ற பகுதி உள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், சிலா் அதைப் பாா்த்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினா் நிகழ்விடம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.பின்னா், வனத்துறையினா் கூறியதாவது: பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்தில் கண்காணித்தோம். ஆனால், சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவலும் இல்லை.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வனச்சரகங்களை பொறுத்தவரை காப்புக்காடுகளில் சிறுத்தையோ, புலியோ எதுவும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரப்பகுதிக்குள் சிறுத்தை வர வாய்ப்பு இல்லை. இருப்பினும் நாங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த கண்காணிப்பு பணி நாளையும் தொடரும். எனவே, பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றனா்