சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்து பலி.
பரமத்தி வேலூர் அருகே சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்,ஆக.22- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பொய்யேரியை சேர்ந்தவர் செந்தில்குமார் (46) லாரி டிரைவர். இவருக்கு நேற்று அதிகாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது மகன் மதன்ராஜ் தனது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர வைத்துக் கொண்டு மோகனூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம் பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது செந்தில்குமார் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடனடியாக இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் அவரது மகன் மதன்ராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் தந்தையை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.