தேசிய சிலம்பம் போட்டிகளில் சாதித்து வரும் விழுப்புரம் மாணவர்கள்
தொடர்ந்து குவியும் பாராட்டுக்கள்
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் எம்.எஸ். சிலம்பாட்ட கழகம் தொடங்கப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டில் இருந்து, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் பயிற்சியை அளித்து வருகின்றனர்.இதில், விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்.தொடர்ந்து, இங்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் சிலம்பம் போட்டியில் தேசிய அளவிலான போட்டி, மாநில அளவிலான போட்டி, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள், கோப்பைகள் வென்று சாதித்து வருவதாக சிலம்பாட்டக் கழக பயிற்சியாளர் சாமிவேல் தெரிவித்தார்.குறிப்பாக, அண்மையில், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், விழுப்புரம் எம்.எஸ். சிலம்பாட்ட கழகத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், மணிகண்டன், தாமஸ் ரெணித்தோ, கோகுல்ராஜ் ஆகிய மாணவர்கள் சிறப்பாக சிலம்பம் சுற்றி முதலிடம் பிடித்து, தங்கம் பதக்கம் வென்றனர். மேலும், மாணவிகள் தங்க ரோஜா, மாதவி, ரத்தீஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.இதே போல், கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த தேசிய அடையாள சிலம்பம் போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் தங்க ரோஜா, மணிகண்டன், மாதவி, கோகுல்ராஜ், தாமஸ்ரெணித்தோ, ரத்தீஷ், போதனா, மாதவன், கண்ணன், சபரி, தர்ஷன், சுதர்சன் ஆகிய மாணவர்கள் கலந்துகொண்டு பதக்கம் வென்று வந்தனர்.இதே போல், மாநில அளவிலான போட்டியில் மதுரை, கடலூர், சங்கராபுரம் பகுதியில் நடந்த போட்டிகளிலும் விழுப்புரம் சிலம்பாட்ட பயிற்சி மாணவர்கள் சென்று சாதித்து வந்துள்ளதாக, சிலம்பம் பயிற்சியாளர் சாமிவேல் தெரிவித்தார்.