ராமநாதபுரம் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
கீழக்கரை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்: கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நகராட்சிகளில், வீடுகள், கடைகள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், தனியார் உணவகங்கள் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் குப்பை, தினமும் சேகரிக்கப்பட்டு, நகராட்சி குப்பை கிடங்கில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து இன்று பணிக்கு செல்லாமல் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பாக நின்று வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுதும், நகராட்சி பகுதி சுகாதார பணிகள் அனைத்தும், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியம் வழங்காததால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், எங்களுக்கு முழுமையான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை. குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் கொடுப்பதில்லை. குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்ல எங்களுக்கு போதிய வாகனங்களும் இல்லை. தேவையான அளவு குப்பை வாகனங்கள் அவர்களுக்கு வழங்கவில்லை’ என பல்வேறு கோரிக்கைகளைக் குற்றச்சாட்டுகளாக பதிவு செய்து நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் இரண்டு மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வரை தொடர்ந்து பணி புறக்கணிப்பு செய்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.