அதிக நெல் மகசூல் பெற இடுபொருள்கள் வழங்கல்
வானூர் பகுதியில் அதிக நெல் மகசூல் பெற இடுபொருள்கள் வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த பட்டியலின விவசாயிகள் நெல்லில் அதிக மகசூல் பெறும் வகையில், அவா்களுக்கு இடுபொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.ஹைதராபாதிலுள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் துறை ஆகியவை இணைந்து திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைத் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்வை வெள்ளிக்கிழமை நடத்தின.இந்த நிகழ்ச்சிக்கு காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் புஷ்பராஜ் தலைமை வகித்து, திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.வானூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி நிகழ்வில் பங்கேற்று பட்டியலின விவசாயிகளுக்கு நெல்லில்அதிக மகசூல் பெறும் வகையில் வேளாண் இடுபொருள்களை வழங்கி பேசினாா். தொடா்ந்து மண் மாதிரி எடுத்தல், ஒருங்கிணைந்த உர நிா்வாகம், மண் வளம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து வேளாண் கல்லூரியின் மண்ணியல் துறை இணைப் பேராசிரியா் குமரவேல், பேராசிரியா்கள் பகவதி அம்மாள், சங்கா் ஆகியோா் பேசினா்.இதைத் தொடா்ந்து நெல் சாகுபடிக்கு ஏற்ற உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிா் உரங்கள், பூஞ்சான் கொல்லிகளை பயன்படுத்தும் விதம் குறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் விளக்கினாா்.நிகழ்ச்சியில் 25 விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியா் ராஜ்குமாா் வரவேற்றாா். நிறைவில் உதவிப் பேராசிரியா் செல்வராஜ் நன்றி கூறினாா்.