பாரிஸ் ஒலிம்பிக் அமைப்பை கண் முன்னே நிறுத்திய தனியார் பள்ளி விளையாட்டு விழா
மயிலாடுதுறையில் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் உச்சத்தை அடைய ஊக்குவிக்கும் விதமாக ஒலிம்பிக் நடைபெற்ற பாரிஸின் அடையாளமான ஈபில் டவர், ஒலிம்பிக் வெற்றியாளர்களின் உருவப்படங்களை பள்ளி விளையாட்டு விழாவில் காட்சிப்படுத்திய பள்ளி நிர்வாகம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மேலையூர் கிராமத்தில் அழகுஜோதி அகாடமி என்ற தனியார் பள்ளி உள்ளது. கோலகலமாக கொண்டாடப்பட்ட இப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியேற்றி தொடக்கி வைத்தார். இதில், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்திய வாலிபால் விளையாட்டு வீரர் கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து பேசினார். விழாவில், மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் உச்சத்தை தொட வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில், விளையாட்டு போட்டிகளில் உச்சமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அண்மையில் பாரிஸ் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கேற்று பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர் வீராங்கனைகளின் உருவப் பதாகைகள் விளையாட்டு மைதானத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. மேலும், பாரிஸின் அடையாளமான உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் டவர் மாதிரி அச்சுஅசலாக செய்து காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் தேசியக் கொடியுடன் நின்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்த்தினர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு லக்கி ட்ரா விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிவாரண பொருட்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.