விபத்து,பாகப்பிரிவினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், தாமதமின்றி, விரைவாக தீர்ப்புகள் வழங்க வேண்டும்.!- சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி கிருஷ்ணகுமார் பேச்சு
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய கூடுதல் நீதிமன்றங்கள் புதிதாக தற்போது தொடங்கப்பட்டுள்ளதால், பணிச்சுமை கணிசமாக குறையும்.
நாமக்கல் மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய நீதிமன்றம் மற்றும் திருச்செங்கோடு கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவற்றின் திறப்பு விழா, நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி வரவேற்றார். நாமக்கல் மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய நீதிமன்றம் மற்றும் திருச்செங்கோடு கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற ஆக்டிங் முதன்மை நீதிபதி D. கிருஷ்ணகுமார், நாமக்கல்லில் இருந்தவாறு திறந்து வைத்து அவர் பேசுகையில்.... பல்வேறு வழக்குகளில் விரைவாக தீர்ப்புகள் வழங்கவும், நிவாரணம் கிடைக்கவும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். நடுவுநிலை தவறாது வழங்கப்படும் தீர்ப்பின்மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.சமுதாயத்திற்கு கடமைப்பட்ட நீதிபதிகள், தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்தும், வழக்கறிஞர்கள் ஒத்துழைப்போடும் உரிய காலத்தில் வழக்குகளை முடிக்க வேண்டும். தற்போதைய நவீன காலத்தில் வழக்காடிகள், தங்கள் வழக்கு விசாரணை நிலவரங்களையும், வாய்தா குறித்தும் ஆன்லைன் வழியாக பார்த்துக் கொள்ள முடியும். வழக்கறிஞர்களும் விரைவாக வழக்கை முடிக்க வேண்டும். 15 / 20 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் தற்போது முடிக்கப்பட்டு, தாமதமின்றி தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பாகப்பிரிவினை மற்றும் விபத்து உள்ளிட்ட வழக்குகளில் வழக்காடிகள் மற்றும் அவரது குடும்ப நிலைமையை உணர்ந்து நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் செயல்பட்டு அவர்களுக்கு உரிய நீதியும், நிவாரணமும் உரிய காலத்தில் பெற்றுத்தர வேண்டும்.நாணயத்தின் இரு பக்கம் போல நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் திகழ வேண்டும். வழக்குகளை தாமதமின்றி உரிய காலத்தில் விரைந்து முடிக்க நீதிபதிகள் நியமனம் மற்றும் நீதிமன்ற கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.தொழில் நகரங்களான நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில்தான் விபத்து வழக்குகள் அதிகம் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த மாவட்டங்களில் இவ்வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதால் விபத்து வழக்குகள் மீதான நிவாரணங்களும் விரைவாக வழங்கப்படுகின்றன.நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய கூடுதல் நீதிமன்றங்கள் புதிதாக தற்போது தொடங்கப்பட்டுள்ளதால், பணிச்சுமை கணிசமாக குறையும்.வழக்குகள் நிலுவையில் இருந்தால் வழக்கு தொடுத்தவரும் அவரது குடும்பமும் பாதிக்கப்படும் என்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விரைவாக நிவாரணம் குடும்பத்தினருக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க சமரச மையம், மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட அமர்வுகளை பயன்படுத்திக் கொண்டு விரைவாகவும் உரிய காலத்திலும் தீர்வு காண வேண்டும். இத்துறையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீதித்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் பேசினார்.முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும், நாமக்கல் மாவட்ட பொறுப்பு நீதிபதிகளுமான ஜஸ்டிஸ் அப்துல் குத்தூஸ் மற்றும் ஜஸ்டிஸ் முகமது சபீக் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர். அப்போது நீதிமன்றங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உரிய நீதி, தீர்ப்புகள் வழங்கப்படுவதாகவும் நாமக்கல் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் கடந்த 2023 ஆம் ஆண்டு 523 விபத்துக்கள், உயிரிழப்பு விபத்துகளாக நேர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். முன்னதாக பேசிய நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன், கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2000 வழக்குகளில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயிரிழப்பு வழக்குகளாக உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, பல்வேறு அரசு துறைகளோடு இணைந்து விபத்து தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா பேசுகையில்.. எந்த ஒரு நீதியும் தாமதமாகாமல் எளிய மக்களுக்கு வழங்க மாவட்ட நீதித்துறையோடு இணைந்து மாவட்ட நிர்வாகம் காவல்துறை அரசுத்துறைகள் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். மோகனூரில் தற்காலிக நீதிமன்றம் செயல்படவும்,, குமாரபாளையம், சேந்தமங்கலம் பகுதிகளில் நீதிமன்ற கட்டடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.இந்த நிகழ்வில் நாமக்கல் சிவில் பிரிவு வக்கீல்கள் சங்க தலைவர் மோகன்ராஜ், கிரிமினில் பிரிவு வக்கீல்கள் சங்க தலைவர் அய்யாவு, திருச்செங்கோடு வக்கீல்கள் சங்க தலைவர்கள் பழனிசாமி, சரவணராஜ், ரவி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.நிறைவாக, நீதிபதி எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.