காலபைரவர் ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழா

கோகுலாஷ்டமியை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த  காலபைரவர்  ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் தீபம் மற்றும் பஞ்சதீபமிட்டு ஆயிரக்கணக்கன பக்தர்கள் வழிபாடு

Update: 2024-08-26 14:04 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் புகழ்வாய்ந்த காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில், சேத்திரபாலாய போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்றதாகும். பைரவரின் சூலாயுதம் இந்த ஆலயத்தில் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது. அர்ஜூனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த காலபைரவர் ஆலயத்தில் ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி கோகுலாஷ்டமி என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு பால், பன்னீர், இளநீர், குங்குமம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

Similar News