பள்ளிநேலியனுார் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி
ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், மதகடிப்பட்டு மேம்பாலம் நான்கு முனை சந்திப்பில் இருந்து தெற்கே கடலுார், பண்ருட்டி, மடுகரை செல்லும் சாலையில் 1.5 கி.மீ., தொலைவில் பள்ளிநேலியனுார் ரயில்வே கேட் உள்ளது. 24 மணி போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு சரக்கு மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்கின்றன.மேலும், இப்பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலைகளில் இருந்து 50 முதல் 200 டன் வரை இரும்புக் கம்பிகள் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் போக்குரவத்தால் ரயில்வே பகுதியில், தார் சாலை மற்றும் ரயில்பாதை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டைகள் சேதம் அடைந்தது. இதனால் வாகனங்கள் தடுமாறிச் செல்லும் நிலை இருந்து வந்தது.இதையடுத்து தென்னக ரயில்வே பொறியியல் பிரிவு சார்பில் ரயில்வே கேட்டிற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு பராமரிப்பு பணி நடந்தது. இந்த பராமரிப்பு பணிக்காக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் சேதம் அடைந்த கான்கிரீட் கட்டைகள் அகற்றப்பட்டு புதிய கான்கிரீட் கட்டைகள் அமைக்கப்பட்டது.