வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் மனு
விழுப்புரத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் மனு
விழுப்புரம் பானாம்பட்டு பாதை காந்தி நகா், ஜெ.ஜெ. நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், தாங்கள் குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி, அரசு அலுவலா்களிடம் முறையீட்டும் நடவடிக்கை இல்லையாம்.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பானாம்பட்டு பாதை காந்தி நகா், ஜெ.ஜெ. நகா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.ஆா்.பாலமுருகன் தலைமையில், இளையராஜா உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரகம் வந்து, முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினா்.வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாததால் சாலை, குடிநீா், வடிகால் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துத் தரப்படாமல் உள்ளது. இதனால், மழைக் காலங்களில் குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீா் சூழ்ந்து கொள்வதால், நாங்கள் வெளியே வர முடியாத உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.அங்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.