இராசிபுரத்தில் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டம்! அசத்திய மாவட்ட ஆட்சியர்!!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, ”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 34 மாணவியர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் இன்று மாவட்டஆட்சியர் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக விடுதியில் தங்கி பயிலும் 34 மாணவியர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்தும் அளித்து பல்வேறு திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் குழந்தைகள் இங்கு தங்கி பயில்கின்றனர். பெண்கள் செவிலியர் மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். அத்தகைய சூழ்நிலையை மாற்றி அமைத்து, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தையல் பயிற்சி உள்ளிட்ட தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக விடுதியில் தங்கி பயிலும் 34 மாணவியர்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முழு ஈடுபாட்டோடு முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி நிறைவு செய்வோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தையல் இயந்திரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தங்கள் பெற்றோருக்கு என்றும் உண்மையாக இருக்க வேண்டும். வளரிளம் பருவத்தினர் இன்றைய நவீன காலத்தில் கைபேசிகளை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள கல்வி சார்ந்த நல்ல கருத்துகளை மட்டுமே எடுத்து கொண்டு தங்கள் கல்வியை மேம்படுத்தி கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோர்கள் அவர்களின் தேவைகளை குறைத்து கொண்டும், தன்னை தானே வருத்தி கொண்டு தான் தங்களுக்கு சிறப்பான கல்வி வழங்கி வருகின்றார்கள். மாணவ, மாணவியர்கள் எந்த பிரிவில் கல்வி பயின்றாலும் முழு ஈடுபாட்டோடு கவனம் சிதறாமல் தங்களது திறமையை முழுமையாக செலுத்தினால் கட்டாயம் வெற்றி பெற முடியும். தற்போது சுய தொழில்புரியும் எலக்ட்ரீசியன், பிளம்பர் தேவை அதிகமாக உள்ளது. மேலும், நீங்கள் அனைவரும் புத்தக படிப்போடு மட்டுமில்லாமல் விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். தற்பொழுது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்திட கடைசி நாள் 2.9.2024 ஆகும். எனவே, ஆர்வம் உள்ளவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களையும் மாணவியர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களை பெண் தொழில் முனைவோர்களாக உருவாக்கி கொள்ள வேண்டும்.தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 34 மாணவியர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வழங்கபட உள்ளது. இப்பயிற்சி தினந்தோறும் மதியம் 3.00 மணி முதல் மாலை 6.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, இப்பயிற்சியில் பங்குபெறும் விடுதியில் தங்கி பயிலும் 34 மாணவியர்களுக்கும் பயிற்சிக்கான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்ரி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் .கி.ரமேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.