துணி ரோல்களை ஏற்றி வந்த பிக்கப் வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து.
அதி வேகத்துடன் வந்த பிக்கப் வாகனம் சாலை தடுப்பில் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்து சாயம் ஏற்றுவதற்காக துணி ரோல்களை எடுத்துக்கொண்டு பல்லடம் நோக்கி பிக்கப் வாகனம் வந்து கொண்டிருந்தது. சின்னக்கரை அருகே வந்த கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் மோதி விடுமோ என்ற அச்சத்தில் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியதால் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் பயங்கரமாக மோதி பிக்கப் வாகனம் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிக்கப் வாகனத்தில் இருந்த துணி ரோல்கள் அனைத்தும் சாலையில் பறந்தன. விபத்தில் சிக்கிய ஓட்டுநரை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். விபத்து ஏற்பட்டதில் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புசுவர் முழுவதுமாக சேதம் அடைந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்க் வரை தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த வாகன ஓட்டிகளும் விபத்து ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளனர். பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த விபத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.