நாமக்கல்லில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அண்மையில், மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்தது. வழக்கறிஞர்கள் தொழிலை பாதிக்கும் வகையில் சட்டங்கள் உள்ளதால், அவற்றை திரும்ப பெற வேண்டும் என நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக் குழு சார்பில், நாமக்கல்–திருச்செங்கோடு சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.கூட்டுக் குழுவின் துணைத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெற வேண்டும், சமஸ்கிருதத்தை திணிக்கக் கூடாது, வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.