விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள்! அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!!
நாமக்கல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆற்று பகுதி படித்துறைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்.” மாவட்ட ஆட்சியர் ச.உமா, தகவல்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன், முன்னிலையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது: விநாயகர் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் முன்கூட்டியே தடையின்மை சான்று விண்ணப்பிக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிடுகையில் ஊர்வலம் செல்லும் வழியில் பிற மதத்தினருக்கு பாதிப்பில்லாத வகையில் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். மாவட்டத்தில் பதட்டமான இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற காவல் துறை மற்றும் வருவாய்த் துறை பணியமர்த்த வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் / சுடப்படாததும் மற்றும் எவ்வித இராசயனக் கலவையற்றதுமான கிழங்குமாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை திடக்கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் இரசாயணங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். சிலை நிறுவுபவர்கள் தற்காலிக கட்டுமானங்களை தீப்பற்றாத உபகரணங்கள் கொண்டு அமைத்திட வேண்டும். சிலை வழிபாடு மேற்கொள்வதற்கான வழிகளினை எவ்வித இடையூறும் இல்லாதவாறு போதிய அளவில் அகலமான பந்தல்கள் அமைத்திட வேண்டும். சிலை அமைப்பாளர்கள் போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் இருப்பதினை உறுதி செய்திட வேண்டும். சிலை அமைந்துள்ள பகுதியினை சுற்றி தீப்பற்றாத பொருட்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். விநாயகர் சிலையின் உயரத்தினை 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது. மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதினை தவிர்த்திட வேண்டும். ஒலிப்பெருக்கிகள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் வழிபாட்டு நேரங்களில் மட்டும் தலா இரண்டு மணி மட்டும் நேரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை தவிர்த்திட வேண்டும். சிலை அமைப்பாளர்கள் சிலை அமைப்பதில் எந்தவிதமான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காமலும் செயல்படுவதினை உறுதி செய்திட வேண்டும். நிகழ்ச்சி நிரலில் எந்த ஒரு மத தலைவரின் மற்றும் அரசியல் கட்சிகளினை சார்ந்த விளம்பரங்கள் இடம் பெறாமலிருப்பதினை உறுதி செய்திட வேண்டும். விநாயகர் சிலை பாதுகாப்பு குழு ஒன்றினை அமைக்க வேண்டும். இக்குழுவில் இடம் பெற்றுள்ள நபர்களின் பெயர் மற்றும் முகவரியை பெற வேண்டும். 24 மணி நேரமும் சிலைப் பாதுகாப்பு குழுவினர் குறைந்தது 2 நபர்கள் சிலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்திட வேண்டும். மின் தடை ஏற்படும் போது ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டும். சுலோகங்களை உச்சரித்தல், மற்ற மதத்தினரை வெறுப்பு பாராட்டுதல், இழிவுபடுத்துதல் போன்ற செயல்கள் எவ்விதமும் அனுமதிக்க இயலாது. வருவாய் துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் குறிப்பிடும் பொது மக்கள் அமைதி பாதுகாப்பு குறித்த நிபந்தனைகளை சிலை அமைப்பாளர்கள் கட்டாயம் கடைபிடித்தல் வேண்டும். தீ விபத்தை தடுப்பதற்கு போதுமான முன்னேற்பாடுகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் செய்ய வேண்டும். பந்தல்களில் அமைக்கப்பட்ட மின் இணைப்புகள் குறித்த பாதுகாப்பினை உறுதி செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்று பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையினை கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல் துறையினரால் முன்னரே திட்டமிடப்பட்ட வழிகளில் கொண்டு சென்று குறிப்பிடப்பட்ட இடங்களில் வரிசை முறையாக கரைத்திட வேண்டும். சிலைகளை எடுத்துச்செல்ல நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர் போன்றவற்றினை பயன்படுத்;திட வேண்டும். மாட்டு வண்டி, மீன் வண்டி போன்ற மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்வதினை தவிர்த்திட வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ல் குறிப்பிட்டுள்ளபடி, சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் வாகனத்தின் திறன் அமைந்திருக்க வேண்டும். சிலை நிறுவப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலும், சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் வழிகளிலும் மற்றும் சிலை கரைக்கும் இடங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதினை தவிர்த்திட வேண்டும். விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கு முன் சிலைகளுக்கு சூட்டப்பட்ட வழிபாட்டு பொருட்களான பூக்கள், வஸ்திரங்கள், பேப்பர் மற்றும் பிளாஸ்டிக்குனால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்றவைகளை எடுத்துவிட வேண்டும். ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யும் நபரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும். சிலை வைக்கப்படும் இடத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் சிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பணியிலிருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்து அட்டவணை தயார் செய்து வைக்கப்படல் வேண்டும். சிலைக்கு பூஜை செய்யும் பூசாரியின் பெயர் முகவரி மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றி குறிப்பிட வேண்டும். சிலை கரைக்கப்படும் இடம், ஊர்வலம் செல்ல வேண்டிய பாதை ஆகியவற்றை காவல் துறையினர் நிர்ணயித்து போதுமான அளவு பந்தோபஸ்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும், இவைகள் கரைக்கப்படும் இடம் போதுமான அளவு தடுப்புச் சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டும். ஊர்வலமாகச் செல்லும் பாதையில் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த அனுமதிக்கக் கூடாது. விநாயகர் சிலை நீரில் கரைக்கப்படும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை நாளிதழ்களில் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக காவல் துறையினர் மாவட்ட சுற்றுப்புறச் சூழல் பொறியாளருடன் இணைந்து பட்டியல் தயார் செய்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் நாளேடுகளில் பிரசித்தம் செய்ய வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் எவ்வித இரசாயண கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை சுற்றுப்புறச் சூழல் பொறியாளர் அறிவிக்கும் நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் மட்கிப் போன துணிகள், உதிர்ந்த மலர்கள், மாலைகள், dewrating materials போன்றவை எரியூட்டுவதை தவிர்க்க வேண்டும். சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மேற்படி நீர்நிலைகளில் மிச்சமுள்ள பொருட்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடித்து அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர். .ஆர்.பார்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) வெ.முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (நாமக்கல்) ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் அசோக் குமார், அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.