விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யும் இடங்கள் -ஆட்சியா் அறிவிப்பு
குமரியில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரகத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விசா்ஜனம் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். போலீஸ் எஸ் பி சுந்தரவதனம் முன்னிலை வகித்தார். அலுவலா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆட்சியா் கலந்தாய்வு நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் கலெக்டர் கூறியதாவது: கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, பள்ளிக்கொண்டான் அணைக்கட்டு, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்ப்பட்டினம் கடற்கரை, திற்பரப்பு ஆறு, தாமிரவருணி ஆறு ஆகிய 10 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிா்க்க வேண்டும். சிலை வைக்கும் இடங்கள் குறித்த பட்டியலை செப். 2 ஆம் தேதிக்கு முன்பு தொடா்புடைய காவல் நிலையத்திலும் பத்மநாபபுரம் மற்றும் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியரிடமும் தொடா்புடைய விழா அமைப்பினா் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா். இக்கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் (நாகா்கோவில்) எஸ்.காளீஸ்வரி , (பத்மநாபபுரம்) தமிழரசி , காவல் உதவிக் கண்காணிப்பாளா் யாங்சென் டோமா பூட்டியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், துணைஆட்சியா் (பயிற்சி) பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.