திருப்பூர்-கேரளா சினிமா துறையில் நடந்தது போல் தமிழக சினிமா துறையில் புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தி துறை அமைச்சர் பேட்டி!

திருப்பூர்-கேரளா சினிமா துறையில் நடந்தது போல் தமிழக சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பேட்டியளித்தார்,

Update: 2024-08-29 10:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர்... கேரள சினிமா துறையில் நடந்தது போல் தமிழக சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திதுறை அமைச்சர் பேட்டி. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர் சாமிநாதன் திருப்பூரில் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிறித்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ் குமார்  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர், “கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும் மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழக முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் இன்று வழங்கப்பட்டுள்ளது” இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும் என்றார். நடிகர் ரஜினிகாந்த் பேச்சை மேற்கோள் காட்டி திமுகவில் ஜூனியர் சீனியர் பிரச்சனை உருவாகி இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியது குறித்து கேட்டதற்கு, அவர் தினந்தோறும் செய்தித்தாள்களிலும் டிவியிலும் வர வேண்டும் என்று பேசி வருகிறார். அவரது பேச்சு ஒரு காலம் எடுபடாது தளபதி வழியில் திமுக கட்டுப்பாடுடனும் கட்டுக்கோப்பாகவும் உள்ளது. அதிமுகவின் பகல் கனவு பலிக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு தொழிற்சாலையும் வெளி மாநிலத்திற்கு செல்லவில்லை தமிழகத்திலேயே தான் தொடர்ந்து இயங்கி வருகிறது வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து கூட தமிழகத்திற்கு வந்து தொழில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது குறிப்பாக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியது மூலம் தொழில் தொடங்க ஆர்வமுடன் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்பொழுது அங்கு பரபரப்பாகி வரும் சூழலில் தமிழகத்தில் தற்பொழுது வரை அது போன்று எந்தவித புகார் வரவில்லை அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Similar News