தரமில்லாமல் பணிசெய்யும் ஒப்பந்தகாரருக்கு டெண்டர் விடக்கூடாது
தரமில்லாமல் நலத்திட்ட பணிகளை செய்யும் ஒப்பந்தகாரருக்கு டெண்டர் விடக்கூடாது கன்னிவாடி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி சண்முகம் தலைமைதாங்கினார். துணைத்தலைவர் கீதாமுருகானந்தம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற பொறுப்பு செயல் அலுவலர் ஜெயமாலு வரவேற்று பேசினார். கூட்டப் பொருளை எழுத்தர் வெள்ளையன் வாசித்தார். அதன்பின்பு மன்ற பொருள் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு வாசிக்கப்பட்டது. அப்போது 2வது தீர்மானத்தில் ஒரே ஒப்பந்தகாரருக்கு 4 நலத்திட்ட பணிகளை டெண்டர் விடுவதற்காக மன்றத்தில் ஒப்புதல் கேட்டு வாசித்தபோது அனைத்து வார்டு உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தரமில்லாமல் பணிகளை செய்யும் அந்த ஒப்பந்தகாரருக்கு பணிகளை வழங்கக்கூடாது டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் வார்டு உறுப்பினர்கள் கூறினார்கள். அதன்பின்பு கூட்டத்தில் பேசிய கீதா முருகானந்தம் நவாப்பட்டியில் உள்ள தெற்கு தெருவில் 6 மாதமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யவில்லை. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஊரக வளர்ச்சி துறை அமைச்சரிடம் இது குறித்து புகார் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார். அதற்கு பதிலளித்து பேசிய செயல் அலுவலர் ஜெயமாலு குடிதண்ணீர் விநியோகம் செய்யும் ஆப்ரேட்டர்கள் முறையாக பணிகளை செய்வது கிடையாது. குழாய்களில் உடைப்புகள் இருந்தாலும் அவற்றை உடனடியாக சரிசெய்வது கிடையாது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வுகாண அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆலோசகர் சியாமளா அவர்கள் பேசும் போது வார்டுகளில் பெண் உறுப்பினர்களை தலைவராக கொண்ட குழுக்கள் அமைத்து பெண்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு பெண் வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் இளங்கோவன், மணிமாலதி, மருதாயம்மாள், ரமேஷ், பிச்சைமுத்து, சர்புதீன், சித்ரா, மகேஷ்வரன், கார்த்திகை செல்வி, சரண்யா உட்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.