அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் மருத்துவப் படிப்புக்கு தேர்வு
ஒட்டன்சத்திரம் அருகே கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த 2 மாணவிகள் 'நீட்' தோ்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையைச் சோ்ந்த விவசாயி செல்லமுத்து-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிரதீபா. இதே ஊரில் உள்ள நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா் 'நீட்' தோ்வில் 551 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்தாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் இவருக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இதே பள்ளியில் படித்த இடையகோட்டைச் சோ்ந்த முகமது ரஷீத், சாஜிதா பா்வீன் தம்பதியின் மகள் ரவுலதுல் ஜன்னா 'நீட்' தோ்வில் 525 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் இரண்டாமிடம் பெற்றாா். இவருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.