முதலீடுகளை ஈர்க்க ஏன் கையேந்த வேண்டும்? : டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு
முதலீடுகளை ஈர்க்க ஏன் கையேந்த வேண்டும்? : டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
தி.மு.கவினர் வெளிநாடுகளில் முதலீடு செய்த 2 லட்சம் கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் நம் முதல்-அமைச்சர் ஏன் வெளிநாடுகளுக்கு சென்று கையேந்த வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொடியங்குளம் கிராமம் தாக்கப்பட்ட நாளை மனித உரிமை மீட்பு நாளாக புதிய தமிழகம் கட்சி அனுசரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை கொடியங்குளம் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 30-வது ஆண்டு தினத்தை மனித உரிமை மீட்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியானது மிகப்பெரிய வறட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் அந்த காலகட்டத்தில் இந்த சமூக கொடுமைகளை எதிர்த்து நிற்க முடியாமல் மக்கள் இருந்தார்கள். இக்கிராமத்தில் இருந்த இளைஞர்கள் பலர் கொடுமைகளில் இருந்து விடுபடவும், வறுமைகளில் இருந்து விடுபடவும் வெளிநாடுகளுக்கு சென்று பொருள் சேர்த்து வந்து கிராமத்தை வளப்படுத்தினார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் கொடியங்குளம் கிராமத்தை முற்றாக அடிமைப்படுத்தி தங்களுடைய வயல்களில் அவர்களை அடிமைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு அன்றைய காவல்துறையாலும், மாவட்ட நிர்வாகத்தாலும் தாக்கப்பட்டது. ஆனால் அதுவே வேறு விதமாக முடிந்தது. மண்ணுரிமையை, மனித உரிமையை வாழ்வுரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களை தொடங்கினார்கள். இந்த 30 ஆண்டுகளில் இந்த மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி மிகப்பெரிய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஆகஸ்டு 31-ந் தேதியை நாங்கள் மனித உரிமை மீட்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறோம். தமிழகத்தில் மது, கஞ்சாவை ஒழித்தால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டிற்கு சென்றதை வரவேற்கிறேன். அதேபோல் தி.மு.க கட்சியினர் சுமார் ரூபாய் 2 லட்சம் கோடியை மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளில் கொண்டு முதலீடு செய்கிறார்கள். அந்த 2 லட்சம் கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் நம் முதல்-அமைச்சர் ஏன் வெளிநாடுகளுக்கு சென்று ரூபாய் 100 கோடி, 200 கோடி என முதலீடுகளை ஈர்க்க கையேந்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.