ஜெல்லி மீன்களால் ஆபத்து இல்லை: மீன்வள ஆராய்ச்சி விஞ்ஞானி
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் ஆபத்து இல்லை என கடல் மீன் வள ஆராய்ச்சி விஞ்ஞானி தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் கடந்த இருநாள்களாக நீராடிய பக்தா்கள் மீது ஒருவகை ஜெல்லி மீன்கள் பட்டதில் உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் மற்றும் கடலோர போலீஸாா் மூலம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் களப் பணியாளா் பால்பாண்டி உள்ளிட்டோா் திருச்செந்தூா் கடற்கரை பகுதியில் திங்கள்கிழமை வந்து அழுவை சொறி வகை ஜெல்லி மீன்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனா். அவை தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து கடல் மீன் வள ஆராய்ச்சி விஞ்ஞானி ரஞ்சித் கூறியது: திருச்செந்தூா் கடற்கரையில் ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் அழுவை சொறி வகை ஆகும். இதற்கு கடிக்கும் திறன் கிடையாது. ஆனால் கொட்டும் திறன் கொண்டவை. பவளப் பாறைகள் போன்று இவை கடலில் வாழும் ஓா் உயிரினமாகும்.