மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வன தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா,தலைமையில் வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-12-26 10:32 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் மாவட்ட வன அலுவலர் சி.கலாநிதி, முன்னிலையில் மாவட்ட வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் குறித்த களப்பணியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் நாமக்கல் வனக்கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது, விபத்தில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு முதலுதவி செய்வது குறித்து ஆலோசனைகள், செயல் விளக்கம் வழங்கப்பட்டது. மேலும் வனத் தீ தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்வுகள் மாவட்ட தீயணைப்புத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இயற்கையை பாதுகாப்பதில் காடு மற்றும் மரங்களின் முக்கியத்துவம், வனத் தீ சம்பவங்களின் தாக்கம், வனத் தீயை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வனத் தீ விபத்துகளின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தீயை அணைக்கும் பணியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, காவல் துறை மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பு, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவ்விழிப்புணர்வு மற்றும் பயிற்சி பட்டறையின் நோக்கம் ஆகும்.2024-2025 ஆம் ஆண்டில் மாவட்ட வனத் தீ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கம்பியில்லா தந்தி (Wireless) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து வனத்துறை அலுவலர்களுக்கும் கம்பியில்லா தந்தி (Wireless Sets) செட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 x 7 வனப்பகுதிகளை கண்காணித்து பாதுகாக்க வனச்சரக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. களப்பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை ஏற்பட்ட வனத் தீ விபத்துகளில் 95 சதவிகித விபத்துகள் ஒரே நாளில் அணைக்கப்பட்டுள்ளன. மேலும், நாமக்கல் மாவட்டம், தற்போது கோடை காலம் துவங்குவதால் (டிசம்பர் முதல் ஜீன் வரை) பொது வனப்பபகுதிக்குள் அனுமதியின்றி செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய (தீப்பெட்டி, பீடி, சிகரெட், பிளாஸ்டிக் பைகள்) எந்த பொருளையும் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் சென்று வனத்தீயினை ஏற்படுத்தக் கூடாது. மீறுவோர் மீது தமிழ்நாடு வனச்சட்டம் 1882, பிரிவு 21-d மற்றும் தமிழ்நாடு வனஉயிரினப் பாதுகாப்புச்சட்டம் 1972 ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மேலும் வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும்.வனத் தீ குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 0427 2900 428 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் கே.செந்தில் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி புவனேஸ்வரி உட்பட வனத்துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News