அரசு மகளிர் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க ஆட்சியரிடம் வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க அதிமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்திடம் வலியுறுத்தினார்.
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2,400-க்கும் மேற்பட்டோர் மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லூரிக்கு மானாமதுரை, காளையார்கோவில், மேலூர், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்கள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல காலை நேரத்தில் போதிய பேருந்துகள் இல்லை. அதேபோல, பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரி முடிந்ததும், பேருந்து நிலையத்துக்கு செல்லவும் போதிய பேருந்துகள் இல்லை. இதனால் அவர்கள் நடந்தும், கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களிலும் செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து காலை, மாலை நேரங்களில் கல்லூரி, பேருந்து நிலையத்துக்கு இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வெளியூர்களில் இருந்து அதிகளவில் மாணவிகள் வருகின்றனர். ஆனால் அவர்கள் வந்து செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை. இதனால் சிரமப்படுகின்றனர். கூடுதல் பேருந்துகளை இயக்க ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தெரிவித்தார்.