பைக்குகள் மோதல்: ரயில் நிலைய அதிகாரி பலி!
கோவில்பட்டியில் பைக்குகள் மோதிய விபத்தில் காயம் அடைந்த ரயில் நிலைய அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம்மணியாச்சி சீனிவாசன் நகர் 6-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் பாலமுருகன் (53). கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரியாக பணியாற்றினார். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் இளையரசனேந்தல் சாலை வழியாக கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியதில், கீழே விழுந்த பாலமுருகன் பலத்த காயமடைந்தார். பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, ராஜூவ் நகர் 3-வது தெருவை சேர்ந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.