நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி!
நடப்பாண்டில் ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரியில் உள்ள அனைத்து துறை பேராசிரியர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகம் கலந்து கொண்டு நோயற்ற வாழ்விற்கு சரியான உணவு பழக்க வழக்கம், நல்ல ஓய்வு, மாலை நேர உடற்பயிற்சி போன்றவற்றினை கடைப்பிடிக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இக்கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் உள்ள அனைத்து துறை பேராசிரியர்களுக்கும் மாதுளை, கொய்யா, சிறு நெல்லி, சந்தனம், மற்றும் செம்மரம் போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பையினை தவிர்த்து மஞ்சள் பைகள் பயன்படுத்த வலியுறுத்தி மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உள்தர உறுதிமைய ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறை உதவி பேராசிரியருமான பாபு மற்றும் கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் தாவரவியல் துறை இணைப் பேராசிரியருமான வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.