மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் 94 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசுப்பள்ளிகளின் மாணாக்கர்களுக்கு விளக்கிடும் வகையில் மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இன்று (05.09.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்புக்கென்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், இத்திட்டங்கள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சென்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஒருவர் விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், குழந்தைகளுக்கான உதவி எண்-1098, பெண்களுக்கான உதவி எண்-181, முதியோர்களுக்கான இலவச உதவி எண்-14567 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டங்கள் குறித்த சுவரொட்டிகள் பள்ளிகளில் ஒட்டப்படவுள்ளது. துண்டு பிரசுரங்களும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகனம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 94 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்