மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் இரண்டு காலயாக சாலை பூஜைகள் இன்று காலை நிறைவுற்று மஹா பூர்ணாகுதி செய்யப்பட்டது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி மற்றும் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.