ரேஷன் கடையில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை:
தூத்துக்குடியில் ரேஷன் கடைக்குள் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி திரவியபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (46). இவர் தூத்துக்குடி முனியசாமி புரத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று ரேஷன் கடை விடுமுறை ஆகும். அதே நேரத்தில் கடைக்கு பொருட்களை இறக்குவதற்காக லாரி வருவதாக அவருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் ராமகிருஷ்ணன் ரேஷன் கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து ரேஷன் பொருட்களுடன் லாரி வந்தது. பொருட்களை இறக்குவதற்காக லோடுமேன் கடையின் உள்ளே சென்றார். அப்போது அங்கு ராமகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு லோடுமேன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், பணிச்சுமை காரணமா?, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராமகிருஷ்ணனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ரேஷன் கடைக்குள் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.