வெட்டுடையார் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் உபயதாரர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் செப்., 4 காலை 9:45 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷகம் பூஜைகள் துவங்கின. கோயில் முன் யாகசாலையில் 45 குண்டங்கள் அமைத்து முதல், 2 ம் கால யாகசாலையுடன் பூஜைகள் துவங்கி நடந்தன. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6:15 மணிக்கு 6 ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீருடன் கடம் புறப்பாடு நடந்தது. கோயிலை சுற்றி வந்து கோபுரங்களில் புனித நீர் கலசம் எழுந்தருளியது. வானில் கருடன்கள் வட்டமிட காரியப்பன் பூஜாரி தலைமையில் பூஜாரிகள் காளியம்மன், ராஜகோபுரம், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வ கோபுர கலசங்களில் நேற்று காலை 10:57 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர்.சிவகங்கை, காளையார்கோவில் உட்பட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக சிவகங்கையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. மாலை 6:15 மணிக்கு தங்க குதிரையில் அம்மன் வீதி உலா எழுந்தருளினார்.அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி, உதவி கமிஷனர் ஞானசேகரன், கோயில் செயல் அலுவலர் நாராயணி மற்றும் உபயதாரர்கள், கொ.அழகாபுரி நகரத்தார், தேவகோட்டை இளையாற்றங்குடி பட்டணசாமி நகரத்தார்கள், திருக்கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.