விருத்தாசலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி

இளைஞர்கள் வண்ணக் பொடிகள் தூவி ஆடி பாடி நீர் நிலைகளில் கரைத்தனர்

Update: 2024-09-09 18:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு அந்தந்த விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக கிராமப் பகுதிகளில் வீதி உலா நடந்தது. அப்போது கிராம மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளையும் அந்த வாகனங்களில் ஏற்றி வழிபாடு நடத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விருத்தாச்சலம் பகுதியில் உள்ள பெரும்பாலான சிலைகள் பெரிய கண்டியங்குப்பம் கிராம பகுதியில் அமைந்துள்ள கல்லாங்காடு ஏரியில் கரைக்கப்பட்டது. அப்போது இளைஞர்கள் மேளதாளங்கள் முழங்கி விநாயகர் சிலைகளை எடுத்து வந்து விநாயகருக்கு சூடம் ஏற்றி அவல்பொரி பொட்டுக்கடலை உள்ளிட்ட நைவேத்தியங்களை வைத்து வழிபட்டு ஆழமான தண்ணீரில் மூழ்கி கரைத்தனர். இதே போல வயலூர் பெரிய ஏரி, மற்றும் அந்தந்த கிராம பகுதிகளில் அமைந்துள்ள குளம் குட்டைகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையிலான இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் மேற்பார்வையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.

Similar News