பழைய பட்டினத்தில் மசூதி வழியாக விநாயகர் சிலை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த பழையப் பட்டினம் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அக்கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி பெற்று,விநாயகர் சிலை வைத்து,பிரதிஷ்டை செய்து கடந்த மூன்று நாட்களாக வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளத்துடன், ஏரியில் கரைக்க இளைஞர்கள் புறப்பட்ட போது அங்கு வந்த ஆலடி போலீசார் சென்ற வருடம் சென்ற பாதை வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்லுங்கள். முஸ்லிம் மசூதி உள்ள பகுதி வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்லக்கூடாது என்று போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் அக்கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடந்த வருடம் மசூதி வழியாக செல்லும் வழியில் பாலம் வேலை நடைபெற்றதால் மாற்று வழியில் சென்றோம். வழக்கம் போல் செல்லும் மசுதி வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்ல அனுமதி கொடுங்கள், என்று கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுவர்கள் கையில் இரண்டு விநாயகர் சிலைகளை கொடுத்து மேளதாளத்துடன் நடனம் ஆடியபடி மசூதி வழியாக சென்றனர். அப்போது அங்கு விரைந்து வந்த, விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி, தடுத்து நிறுத்தி, மேளம் அடித்துச் சென்ற இளைஞர்களின் கையில் இருந்து மேளம் அடிக்கும் குச்சியை பிடுங்கி மேள அடிக்காமல் அமைதியாக சொல்லுங்கள் எனக் கூறினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கடந்த வருடம் சென்ற வழியாக பெரிய விநாயகர் சிலையை எடுத்து செல்லுங்கள் என்று கூறியதுடன், கூட்டத்தோடு சென்று விநாயகர் சிலையை கரைக்கச் சொல்லி, அமைதியாக அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினார். பின்பு ஏரிக்கரை பகுதியில் இருந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.