மங்கலம்பேட்டை மற்றும் மாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் ஆய்வு
தொழுநோய் குறித்து சுகாதார அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்
மங்கலம்பேட்டை மற்றும் மாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் தொழுநோய் பிரிவு டாக்டர் சித்திரைச் செல்வி நேரில் ஆய்வு செய்தார். அப்போது தொழுநோய் சம்பந்தமாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்ட அவர் எத்தனை தொழுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். எத்தனை பேருக்கு ஆரம்ப அறிகுறிகள் உள்ளது. முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளுக்கு தோல் பரிசோதனை செய்து ஏதேனும் தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் தென்படுகிறதா என கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வீராரெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சென்ற அவர் தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்ட மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சைகள் அளித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொழுநோயின் அறிகுறிகள், உணர்ச்சியற்ற தேம்பல், காதில் தடிப்பு, உணர்ச்சியேற்ற தன்மை உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்தர், டாக்டர்கள் ரியாஸ், ராமநாதன், மருந்தாளுநர் சிவா, வட்டார தொழுநோய் ஆய்வாளர் செல்லதுரை, தொழுநோய் களப்பணி தன்னார்வலர் சுரேஷ்பாபு மற்றும் களப்பணியாளர்கள் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.