குத்தாலம் முன்னாள் எம்எல்ஏவை தரக்குறைவாக பேசியதால் பொதுக் கூட்டத்தில் சலசலப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து கட்சியினர் நடத்திய போராட்டத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏவை தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றம்சாட்டி போராட்டக்காரர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்

Update: 2024-09-11 04:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி 16வது வார்டு அதிமுக உறுப்பினர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விசிக உட்பட  பல்வேற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த தாட்கோ கடை  (ஆதிதிராவிடர்களுக்காக) மீண்டும் புதிதாக கட்டி பட்டியல் இனத்தவருக்கே வழங்க வேண்டும், பேரூராட்சியில் எம்ஜிஆர் வணிகவளாகம் கட்டிடத்தை இடிக்கப் போவதாக அஜந்தாவில் குறிப்பிட்ட பேரூராட்சி நிர்வாகம் தாட்கோ கடையை இடிக்க தகவல் கொடுக்காததை கண்டித்தும், தமிழ்நாடு தாட்கோ கட்டிட நிதியை பேரூராட்சி நிர்வாகம் பயன்படுத்தி கொள்ளாததை கண்டித்தும் தாழ்த்தப்பட்ட மக்களை பேரூராட்சில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தப் போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்டகுழு உறுப்பினர் ராமகுரு என்பவர் திமுக முன்னாள் எம்எல்ஏ கல்யாணம் என்பவரை ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி அங்கு வந்த திமுக பேரூர் கழக செயலாளர் சம்சுதீன் தலைமையில் வந்த திமுகவினர் போராட்டக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி தலைமையிலான  குத்தாலம் போலீசார் மோதல் ஏற்படாமல் தடுத்தனர். தொடர்ந்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கண்டித்து முழக்கமிட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரும் குத்தாலம் காவல் நிலையத்தில் தனிதனியாக புகார் மனு அளித்துள்ளனர்.

Similar News