விவேகானந்தா கல்வி நிறுவன கட்டுமான பணியின் போது விபத்து
விவேகானந்தா கல்வி நிறுவன கட்டுமான பணியின் போது விபத்து
. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேஉள்ள உலகப்பம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை முரளி என்பவர் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார். இவரிடம் மேஸ்திரி ஆக பணியாற்றும் அசோக் என்பவர், தினசரி வேலைக்கு ஆட்களை அழைத்து வந்து வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மதிய உணவு நேரத்தில் 5-வது மாடியில் இருந்து படிக்கட்டு வசதிகள் ஏதுமில்லாத நிலையில், பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவியதால், கட்டுமான பொருட்கள் ஏற்றிச்செல்லும் லிப்ட் மூலம் 6-பேர் கீழே இறங்கி உள்ளனர். நடுவழியில் லிப்டின் கம்பி அறுந்து போனதால், லிப்ட் வேகமாக வந்து தரையில் விழுந்துள்ளது. இதில் சேகர் என்பவருக்கு முதுகு தண்டிலும், பழனிச்சாமி என்பவருக்கு பின்பக்க தலையிலும், சண்முகம், சக்திவேல், பாபு, மனோகர் ஆகியோருக்கு கை கால் எலும்புகளில் முறிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் தரவேண்டாம் எனவும், அனைத்து மருத்துவ செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என மேஸ்திரி அசோக் மூலம் காண்ட்ராக்டர் முரளி தெரிவித்ததாக தெரிகிறது. இதனை நம்பி புகார் எதுவும் கொடுக்காமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஓவியருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நிலையில், இதுவரை அளித்த சிகிச்சையே போதும் இனிமேல் சிகிச்சை தேவை இல்லை எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்து அனுப்பி விட்டனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கட்டட தொழிலாளிகளுக்கு மேற்கொண்டு எந்த உதவியும் செய்யாமல் அவர்களது கூடுதல் மருத்துவச் செலவை கவனித்துக் கொள்ளாமல் ஒப்பந்ததாரர் முரளி மற்றும் மேஸ்திரி அசோக் ஆகியோர் ஏமாற்றி வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேகரின் அண்ணன் செல்வம், தனது தம்பி சேகருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதாகவும், கருத்து வேறுபாட்டில் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதால் தனது தம்பியை தானே பராமரித்து வருவதாகவும், கட்டிட விபத்தில் அடிபட்டு முதுகுத்தண்டில் அடிபட்டு இனிமேல் இயங்க முடியுமா என்கிற உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிற எனது தம்பி சேகர் வாழ்வாதாரத்திற்கு ஒப்பந்ததாரோ மேஸ்திரியோ எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. மருத்துவ சிகிச்சை முடியாத நிலையில், மேலும் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை பொறுப்பேற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை எனவே விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்தப் பணி எடுத்து கட்டிட வேலை செய்து வரும் முரளி மற்றும் மேஸ்திரி அசோக் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர் என முதுகுத்தண்டில் அடிபட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேகரின் அண்ணன் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கட்டிட வேலை செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும், காப்பீடு உள்ளிட்ட எந்தவித தற்காப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை செய்யும் இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, எந்த ஒப்பந்ததாரோ, மேஸ்திரியோ அல்லது கட்டிட வேலை செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனமோ அல்லது கட்டிட வேலை செய்யச் சொன்ன நிர்வாகமோ எந்த உதவியும் செய்வதில்லை. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன உத்தரவாதம் எனவும் தெரியவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் புலம்புகின்றனர்.