கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுசாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் 1,274 ஓட்டுச்சாவடிகள் உள்ளது.இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500க்கும் மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது, புதியதாக ஓட்டுசாவடி அமைப்பது மற்றும் ஓட்டுச்சாவடி இடமாற்றம்(கட்டடம் மாற்றங்கள்) தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் அளித்த தகவல்கள் குறித்து கேட்டறிந்து கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.