தெருவில் தோண்டப்பட்ட பள்ளம் பொதுமக்கள் அவதி
திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகளை முடிக்காததால் பொதுமக்கள் தாவித்தாவி செல்ல வேண்டியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணி கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.குழாய் பதிப்பதற்காக தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டப்படும் நிலையில் அவை மீண்டும் சரி செய்யப்படவில்லை. ஒப்பந்தகாரார்கள் பணிகளை கிடப்பில் போட்டு விடுகின்றனர். இந்திராநகர், நாடார் தெரு, அக்ரஹாரம், புதுார் உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன.ஒரு சில பகுதிகளில் பள்ளங்கள் சரி செய்யப்பட்டாலும் பழையபடி பெயர்ந்து பள்ளங்களாக மாறி விட்டன.மக்களின் புகாரையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன் பள்ளத்தை சரி செய்வதற்காக பள்ளங்களில் இருந்து ஒரு அடி ஆழத்திற்கு மணலை அகற்றினர். ஆனால் இன்று வரை அதனை மூடவில்லை. இதனால் நடக்க கூட பாதையின்றி பொதுமக்கள் தாவி சென்று வருகின்றனர்.இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினசரி பள்ளி செல்ல சிறுவர் சிறுமியர்கள் என பலரும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குழாய் பதிக்கும் பணியை விரைவுபடுத்தி தெருக்களை சரி செய்ய வேண்டும்.