முத்தாரம்மன் கோவில் டிரைவர் வெட்டப்பட்ட விவகாரம்!
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் டிரைவர் வெட்டப்பட்ட விவகாரத்தில் கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஹரிஸ், குமார் ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். மேலும் நடராசன் என்பவரை ஹரிஸ் தனக்கு உதவியாக கோவில் பூஜை பணிக்கு வைத்திருந்தார். கடந்த மாதம் ஹரிசின் உறவினர் ஒருவரை 3-வது அர்ச்சகராக கோவில் நிர்வாகம் நியமித்தது. அவர் கடந்த மாதம் 19-ந் தேதி பணியில் சேர்ந்தார். இதை ஹரிஸ் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 3-வது அர்ச்சகர் நியமிக்கப்படுவதற்கு கோவில் டிரைவரான சண்முகம் தான் காரணம் என அவர் மீது ஹரிஸ் தரப்பினர் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று டிரைவர் சண்முகம் வேைல முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார், அர்ச்சகர் ஹரிஸ், அவரது உதவியாளர் நடராசன், குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த செல்வமணி, முத்து அசோக், நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த குமரன் என்ற முத்துக்குமரன், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்ற கொம்பையா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், செல்வமணி, முத்து அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குமரன் சாத்தான்குளம் கோர்ட்டிலும், குமரேசன் திருச்செந்தூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஹரிஸ், நடராசன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். டிரைவர் சண்முகம் வெட்டப்பட்ட வழக்கு தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் ஹரிசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தீர்மானத்தின் படி அர்ச்சகர் ஹரிசை பணி இடைநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான உத்தரவு நகல் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பூட்டப்பட்ட இருந்த அவரது வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது.