விவசாயிகளின் உரிமை பெற்ற இனாம் நிலத்தை ஏலம் விட அறிவித்த இந்து சமய அறநிலை துறை
500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அலகுமலை கிராமம் கோவில்பாளையத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 1500 ஏக்கர் மதிப்பிலான நிலத்திற்கு அனுபவ உரிமையும் ஆவண வழியான உரிமையும் பெற்றிருக்கக் கூடிய இனாம் நிலங்கள் உள்ளன.ஏற்கனவே விவசாயிகள் பயன்படுத்தி வந்த இந்த நிலங்களின் பட்டாதாரர் பெயரை நீக்கி தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உரிமையை பெறாமலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி சொத்தை சுவாதீனம் எடுக்காமலும் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்ய தடை ஏற்படுத்தியுள்ளதாகவும்,இன்று 16 ஏக்கர் நிலத்தினை ஏலம் விட இந்து சமய அறநிலை துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள இந்த நிலங்களை ஏலம் விடுவதை கண்டித்து இன்று அலகுமலை முருகன் கோவில் அடிவாரத்தில் திடீரென 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். ஏல அறிவிப்பை ரத்து செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து 500க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த இந்து சமய அறநிலைத்துறையில் சுப்பிரமணியம் என்பவரை சுற்றி வளைத்து விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் செயல் அலுவலர் அங்கிருந்து கிளம்ப முயன்றார். நிலையில் செயல் அலுவலரின் வாகனத்தை மறித்த விவசாயிகள் ஏல அறிவிப்பை ரத்து செய்தால் மட்டுமே வாகனத்திற்கு வழி விடுவோம் என மறித்து நின்றதால் போலீசாரின் உதவியோடு செயல் அலுவலர் அங்கிருந்து புறப்பட்டார். ஏலத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்த நிலையில் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று அறிவிக்கப்பட்டிருந்த ஏலத்தினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவிப்பானை வழங்கிய பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இனாம் நில பிரச்சினை குறித்து தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு உடனடியாக இனாம் நில சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.