காங்கேயத்தில் கறிக்கடை மற்றும் கோழி பண்ணை உரிமையாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் ஊதியூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெறி நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. இதை அடுத்து காவல்துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Update: 2024-09-25 02:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் காவல் நிலையம் மற்றும் ஊதியூர் காவல் நிலைய  பகுதியில் தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்கள் கடித்து ஆடு,மாடு,கோழி போன்ற கால்நடைகள் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் கால்நடைகளை கொடூரமாக தாக்கிய நாய்களால் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. மேலும் இந்த நாய்கள் தாக்குவதற்கு முக்கிய காரணமே கோழி,ஆடு,மீன் போன்ற மாமிச கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சியின் கழிவுகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கடைகளில் இருந்து இந்த இறைச்சி கழிவுகளை சாலைகளின் ஓரமாகவோ அல்லது வாய்க்கால் வழித்தடங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், பொதுமக்கள் குப்பைகள் கொட்டும் இடங்களிலும் வீசப்படுகின்றது. இந்த மாமிச கழிவுகள் உணவாக உட்கொண்ட தெரு நாய்கள் பின்னர் வெறிநாய்களாக மாறுவதுடன் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது ஆடு,மாடு,கோழி போன்ற கால்நடைகளை தாக்கி உணவாக எடுத்துக் கொள்கின்றது. மேலும் தற்போது சில இடங்களில் மனிதர்கள் மற்றும் குழந்தைகளை தாக்குகிறது. இதனால் கடந்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கு மருந்துகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு காங்கேயம் மற்றும் ஊதியூர் காவல் துறை, காங்கேயம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் வருவாய் துறையினர் , கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம்,  கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மற்றும்  பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாமிசங்களை கண்ட இடங்களில் கொட்டாமல் நகராட்சி மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாமிச கழிவுகளை  அப்புறப்படுத்துவதற்கு  நவீன வசதிகள் கொண்ட இயந்திரங்கள்  வழங்கிட கோரிக்கை முன்வைத்தனர். காங்கேயம் மற்றும் ஊதியூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயம் வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுச்சாமி, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள், கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள். என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News