தாமிரபரணியில் ஒரு சொட்டு சாக்கடை கலந்தாலும் கோடி கணக்கில் அபராதம்!

தாமிரபரணியில் ஒரு சொட்டு சாக்கடை கலந்தாலும் கோடி கணக்கில் அபராதம் : உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Update: 2024-09-25 07:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் கடும் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறதா?, அதனை தடுக்க என்ன வழி? என்பதை வருகிற 26 ம் தேதி, பொது பணித்துறையின் நெல்லை, நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் உயர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா நடைபெறும். 2018 அக்டோபரில் மகாபுஷ்கரம் நடந்தது. தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும் இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் 11.03.2024 அன்று தீர்ப்பு வழங்கினர். அதில் மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை அறநிலையத்துறையினர் சீரமைக்க வேண்டும். சாக்கடை கலக்காமல் தடுக்க மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்பளித்தனர். இந்த தீர்ப்பு மீது எடுத்த நடவடிக்கை குறித்து விவரங்களை சமர்பிக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படிஇந்த வழக்கு நேற்று (24.09.2024) விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி ஆஜர் ஆனார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது "தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், மாநாகராட்சிகளில் இருந்து ஒரு சொட்டு கழிவு நீர் கூட தாமிரபரணி ஆற்றில் கலக்க கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும். இதையும் மீறி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் கடும் அபராதம் விதிக்கப்படும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பட்னா போன்ற நகரில் இதுபோல நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். இல்லையேல் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும். வருகிற 26 ம் தேதி, தாமிரபரணி ஆற்றின் பொது பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், தாமிரபரணி ஆற்றில் உள்ள 84 மண்டபங்கள், படித்துறைகளை யார் பராமரிப்பது பாதுகாப்பது என்பது குறித்தும் உள்ளாட்சி அமைப்புகள், பொது பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26 ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Similar News