வாய்க்கால் தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் கடைமடை விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் குற்றச்சாட்டு.
மஞ்சளார் அணை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீரை நம்பி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள புதிய ஆயகட்டு வாய்க்கால் பகுதியில் தேவதானப்பட்டி, புள்ளக்காபட்டி எருமலை நாயக்கன்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் நேரடி பாசனம் வசதி பெறுகின்றது. மஞ்சளார் அணையின் புதிய ஆயகட்டு வாய்க்கால் பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள், குப்பைகள் நிறைந்தும், செடி கொடிகளால் புதர்கள் அடைந்தும், விவசாயக் கழிவு பொருட்கள்,மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வாய்க்கால் முழுவதும் காணப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி ஒரு போக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ள நிலையில் வாய்க்கால் முழுவதும் தூர்வாரப்படாமல் காணப்படுவதால் கடைமடை பகுதிகளான 12 மற்றும் 13 வது மதகுப்பகுதிகளுக்கு இந்த ஆண்டும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சனை குறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் மஞ்சளார் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் பொழுது புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கடைமடை பகுதிகளுக்கு முறையாக நீர் வந்து சேராததால் கடைமடை விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகுவது தொடர்வதாக கூறும் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், ஆண்டுதோறும் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இந்த ஆண்டும் அதே நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.