கால்வாயில் மணல் திருடப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்
மானாமதுரை அருகே கால்வாயில் மணல் திருடப்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பில்லத்தி கிராமத்திற்கு அருகில் உள்ள என்.பெருங்கரை மற்றும் இடையன் கண்மாய் பகுதியில் செல்லும் கால்வாய் பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவில் டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் மணலை கடத்தி வருகின்றனர். தொடர்ந்து மணலை கடத்தி வருவதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது: கால்வாயில் மணலை திருடி செல்வதினால் மழைக்காலங்களில் தண்ணீர் வரும்போது பள்ளங்களில் தேங்கி விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் செல்வதினால் ரோடும் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாமல் குண்டும், குழியுமாக மாறி உள்ளது.ஆகவே மாவட்ட நிர்வாகம் மணல் திருடர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.