சத்தியமங்கலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
சத்தியமங்கலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி கொமாரபாளையம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றோர். சத்தியமங்கலத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சி, சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவகுமார் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உமாசங்கர் பேரணியைத் தொடங்கிவைத்தார். ஊராட்சித் தலைவர் எஸ்.எம். சரவணன் முன்னிலை வகித்தார். அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரிமாணவ, மாணவிகள் தூய்மை, பிளாஸ் டிக் ஒழிப்பு குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் ஆங்காங்கே உள்ள குப்பைகளை சேகரித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், ராதாமணி,ஊராட்சி மன்றத்துணை தலைவர் ரமேஷ்,ஊராட்சிசெயலர் ஆர்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.