கொடைக்கானலில் ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வனப்பகுதியில் பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வழியில் உள்ள சோதனை சாவடிகளில் நுழைவு கட்டணம் வசூலிப்பதால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மேல்மலை பகுதியில் இருந்து காலை நேரத்தில் சிக்கி கொள்வதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் இன்று (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு, கோக்கர்ஸ்வாக், பசுமை பள்ளத்தாக்கு வழியாக பில்லர்ராக் பகுதிகளை கண்டுகளித்த பின்னர் மீண்டும் அப்சர்வேட்டரி வழியாக நகருக்குள் திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் மேலும் கனரக வாகனங்கள் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. மேல்மலை பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அப்சர்வேட்டரி வழிய செல்லலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.