உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இலவச தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

Update: 2024-09-28 11:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் கால்நடை மருந்தகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 110 கால்நடை நிலையங்களில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 52,000 நாய்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 20,000 இறப்புகளை ஏற்படுத்தும் வெறிநோயிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும பாதுகாப்பதற்கு அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடுவது அவசியமாகும். மனிதர்களுக்கு வெறிநோய் 90 சதவிகிதம் நாய்கடி மூலமாகவே பரவுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.ஈ.மாரியப்பன், கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News