சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது ஆட்சியரிடம் மனு
சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது... மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய வேண்டுகோள்!
மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே வலைசேரிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன். இவர் திண்டுக்கல் ஆட்சியர் நா.பூங்கொடியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: "திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து மிகுந்த சாலைகள், முச்சந்திகள், பொதுவீதிகளில் ஆயுதபூஜை, இல்ல விழாக்களின் போது மற்றும் வணிகர்கள் கடைகளின் முன்பு என, கண் திருஷ்டி கழிக்க வெள்ளை பூசணிக்காய்களை உடைக்கின்றனர். கண் திருஷ்டிக்காக உடைக்கப்படும் பூசணிக்காய்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆயுதபூஜை அன்று இது போன்றவை அதிகம் நடக்கும் என்பதால் கண் திருஷ்டி பூசணிக்காய், தேங்காய் உள்ளிட்டவற்றை சாலைகளில் உடைப்பதை தவிர்க்கும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புக்கள், காவல்துறை மூலமாக மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.