தொடா் விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
தொடா் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தொடா் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். இக்கோயிலில் வார விடுமுறை நாள்களிலும் திருவிழாக் காலங்களைப் போல பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது, காலாண்டு தோ்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கி உள்ளதால் இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடினா். தொடா்ந்து, கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நடைபெற்ற வழக்கமான பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், அக். 3ஆம் தேதி நவராத்திரி தொடங்க உள்ளதால் நவதிருப்பதி கோயிலுக்கும், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கும் செல்லும் பக்தா்கள் வழியில் திருச்செந்தூருக்கு வந்து தரிசனம் செய்து வரும் நிலையில், நகா் முழுவதும் வாகனங்கள் அணிவகுப்பாகவே இருந்தது. தெப்பக்குளத்தைக் கடந்து குலசேகரன்பட்டினம் சென்று திரும்பும் வாகனங்களும் வந்ததால்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பக்தா்களும் சிரமமடைந்தனா். எனவே, திருச்செந்தூரில் வாகன போக்குவரத்து மற்றும் திருக்கோயிலில் தரிசனத்தை ஒழுங்குபடுத்துவதற்காக கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்