சிவகங்கை கோவில் யானை உயிரிழப்பு பாகன் கைது
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் கோவில் யானை தீ விபத்தால் உயிரிழந்த சம்பவத்தில் யானை பாகனை வானத்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், ஆத்தங்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 1971ல் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலுக்கு, பெண் யானை சுப்புலட்சுமியை குட்டியாக வழங்கினார்.கடந்த 53 ஆண்டுகளாக குன்றக்குடி வரும் பக்தர்களின் செல்ல பிள்ளையாகவே அந்த யானை வாழ்ந்தது. இந்நிலையில் செப்.11 இரவு 11மணிக்கு யானை தங்கியிருந்த தகர கொட்டகையில் தீப்பற்றி யானை தீக்காயமடைந்தது. செப்.13 அதிகாலை 2மணிக்கு அந்த யானை இறந்தது. மாவட்ட வன அலுவலர் பிரபாவதி தலைமையிலான வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது, யானையை அடக்க பயன்படும் அங்குசத்திற்கு, செப்.11 இரவு 10 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபட்ட பாகன் விளக்கை அணைக்காமல் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த விளக்கிலுள்ள தீ பரவியதில் தான் யானை இறந்தது. இதையடுத்து குன்றக்குடியை சேர்ந்த யானை பாகன் கார்த்தி(45) என்பவரை, வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வன அலுவலர் பிரபாவதி கூறும்போது யானை காலில் சங்கிலியால் கட்டாமல் நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் ஆனால், விபத்து நடந்த அன்று இரவு யானையின் காலில் சங்கிலியால் கட்டிவிட்டு பாகன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆகையால் கவனக்குறைவாக இருந்ததற்காக பாகன் கார்த்தி(45) மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம் என்றார்.