தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் : அமைச்சர் அறிவுரை
இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் எந்தஒரு செயல் செய்வதாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்முகத்தேர்வு மூலமாக தெரிவு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் வழங்கி தெரிவித்ததாவது: படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கு நல்ல ஊதியத்தில் பணி கிடைக்கப்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே அவர்களது வாழ்நாள் இலட்சியமாகும். அத்தகைய இளைஞர்களின் நலனில் பெரிதும் அக்கறைகொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக முழுவீச்சில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார்துறையில் பணிநியமனம் பெறும் வகையில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை பெரிய அளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 17.02.2024 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 80 வேலையளிக்கும் நிறுவனங்களும் 1150 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் 133 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிநியமனம் பெற்றனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் 143 தனியார்துறை நிறுவனங்களும், 10 திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்து மேற்பட்ட 5000க்கும் கொண்டு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிவரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து TNPSC, SSC, TNUSRB, TRB போன்ற பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத மற்றும் கட்டணம் செலுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர இயலாத ஏழை எளிய இளைஞர்கள், இளம்பெண்களின் அரசுப்பணி கனவை நனவாக்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஒளிப்பரப்பும் திட்டத்தை நமது தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியானது கல்வித்தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரையும் மற்றும் மறுஒளிபரப்பு இரவு 07.00 மணிமுதல் 09.00 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி குரூப் IV தேர்வில் 8 நபர்களும், குரூப் II A தேர்வில் 7 நபர்களும், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வில் 21 நபர்களும், பணியாளர் தேர்வு ஆணைய தேர்வில் 20 நபர்களும், பெடரல் பேங்க் தேர்வில் 1 நபரும், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் துணை ஆய்வாளர் தேர்வில் 2 நபர்களும், டி.என்.பி.எஸ்.சி குரூப் ஐஐ முதல்நிலைத் தேர்வில் 2 நபர்களும் தேர்ச்சி பெற்று பயனடைந்துள்ளனர். போட்டித்தேர்விற்கு தயாராகும் போட்டியாளர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், இளைஞர்களின் நலனில் பெரிதும் அக்கறைகொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்கள் தொடந்து அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்ஒரு பகுதியாக, இன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 96 வேலையளிக்கும் நிறுவனங்கள் வந்திருக்கிறார்கள். கடந்த முறை 1150 பேர் நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் 133 பேர் தான் பணியில் சேர்ந்துள்ளார்கள். காரணம் என்னவென்றால் வெளியூர் வெளி மாவட்டங்களுக்குச் சென்று பணி செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு போறதாக இருந்தாலும் சரி, தனியாக சுயதொழில் தொடங்கினாலும் சரி அல்லது இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினாலும் சரி சிரமங்கள், சிக்கல்கள் வருவது இயல்பு. அதனை நாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிடலாம் என்று தன்னம்பிக்கை இருக்க வேண்டும். எனவே, தங்களது திறமைக்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து உங்களது பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் அதிகளவில் தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டுமென்று நோக்கில் மானியமாக தொழிற்கடன் என்றெல்லாம் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோல, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான கடனுதவிகள், உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பயிற்சிகள், மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துதல் என மகளிர் நலன்;காக்கும் வகையில் திட்டங்களை வகுத்து பெண்களின் வேலைத்திறன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறார்கள். இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி எல்லாம் வழங்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கக்கூடிய தனித்திறமைகளை இளைஞர்களிடையே எதிர்கால தமிழ்ச் சமுதாய இளைஞர்களிடையே உருவாக்கிட வேண்டுமென்ற அடிப்படையில் தான் இதுபோன்ற பயிற்சி எல்லாம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, UPSC, TNPSC, SSC, TNUSRB, TRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தேவையான இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, அவர்களுக்கு தேவையான நிதியுதவியும் அளித்து வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு எதிர்கால சந்ததியினர்களாகிய, எதிர்கால தலைவர்களாகிய இளைஞர்களை அனைத்து திறமைகளையும் பெற்றவர்களாக உருவாக்கிட வேண்டுமென்றும், அவர்களின் மனித்திறமைகளையும், தனித்திறமைகளையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. எனவே, உங்களுடைய குடும்ப நலனை மனதில் வைத்துக்கொண்டு, இளைஞர்கள் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் படித்து முடித்து ஏதாவது ஒரு நிறுவனத்திலோ அல்லது சுயதொழில் தொடங்கியோ அதிகப்படியான வருமானம் ஈட்டி வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்கள். முகாமில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: நமது தூத்துக்குடி மாவட்டம் தொழில் துறையில் வளர்ந்து வரக்கூடிய ஏற்கனவே நல்ல தொழில் வரலாறு உடைய மாவட்டம். இங்கு இருக்கக்கூடிய பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு தொழில் வாய்ப்புகளில் புதிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளார்கள். நமது தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வேலைபார்ப்பதற்காக அதிக விருப்பத்தைக் கொண்டுள்ளார்கள் என்பது நமது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. எனவே, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களில் மட்டுமே ஏறக்குறைய இரண்டாயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் எல்லாம் இந்த முகாமின் மூலமாக வேலைநாடுநர்களை தேர்வு செய்வதற்கு வருகைதந்துள்ளார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தற்போதுவரை 96 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளார்கள் மூலமாக சுமார் 4000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இங்கு கிடைக்கின்றன. அந்த வாய்ப்புகளை அனைத்து இளைஞர்களும், வேலைநாடுநர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும் நிறுவனங்கள் இங்கு வந்துள்ளார்கள். அந்த வாய்ப்புகளை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நல்ல படியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கையில் வேலைபெறுவது என்பது ஒரு கடினமான சூழ்நிலையாக இருக்கும் என்ற நிலையை மாற்றி, தனது திறமைக்கு ஏற்ற நல்ல வேலைகளைத் தேடித்தருவதற்கு இந்த முகாமினை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறுவதற்காக வந்திருக்கக்கூடிய அனைத்து வேலைநாடும் இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது கிடைத்திருக்கக்கூடிய வேலை உங்களுக்கு ஒரு சிறு வேலையாக இருக்கலாம். எதிர்காலத்தில் இந்த அனுபவத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்த வேலைக்கு செல்வதற்கு இந்த வாய்ப்பை நல்ல படியாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் வேலை பெறுவதற்காக வந்துள்ளீர்கள். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பம் கல்வி கற்கும் என்பது புகழ்பெற்ற மொழி. தற்போதுள்ள சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாரு, ஒரு பெண் வேலை பெற்றால் அந்த குடும்பத்தினுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரமும் பெரிய அளவிற்கு மேம்படும். குழந்தைகள் நல்லபடியாக படிப்பார்கள். ஒட்டுமொத்த குடும்பத்தினுடைய நலன் நன்கு பாதுகாக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. எனவே, அதிகப்படியான பெண்கள் வேலைபெறுவதில் முழுகவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த வேலை செய்யும் மகளிரின் சதவிகிதத்தில் மிக அதிக சதவிகித பங்களிப்பு பெண்களிடமிருந்து வருகிறது. பெண்களை வேலை செய்வதற்கு முழுமையான வாய்ப்பளித்து உரிமையளித்து பல இடங்களுக்கு அனுப்புவதற்காக ஒரு மனப்பாங்கினை வளர்த்து கொண்ட சமத்துவ சமுதாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து பெண்களும் நல்ல முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோன்று வேலை பெறக்கூடிய அனைத்து இளைஞர்களும் இந்த வாய்ப்பு ஒரு சிறு வாய்ப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இந்த வாய்ப்புகளை நல்ல உயர்வுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்;வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பார்வையிட்டார்கள். இம்முகாமில், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) பெ.மல்லிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சை.சைய்யது முகம்மது, உதவி இயக்குநர் (திறன் மேம்பாட்டு பயிற்சி) ஏஞ்சல் விஜய நிர்மலா, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், அரசு அலுவலர்கள் உட்பட இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.