உலக சமாதானம் வேண்டி தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் உலகில் சமாதானம் நிலவ வேண்டி இயற்கை வழிபாடு செய்து அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

Update: 2024-10-07 04:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்கள் அருளியபடி இயற்கை வழிபாடு மூலம் அகண்டதீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ மஹா வாராகி அம்மன் அலங்காரத்தில் அன்னை ஆதிபராசக்தி காட்சியளித்தார். உலகில் போர் பதற்றம் நீங்கி சமாதானம் மலரவும், விவசாயம் செழிக்கவும், அளவான மழைவளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும் வேண்டி சங்கல்பம் செய்து குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையில் உள்ளே அகண்டம் ஏற்றப்பட்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டது. தொடர்ந்து தாமரை சக்கரத்தில் 5 கன்னிப்பெண்கள் கையில் காமாட்சி விளக்கு ஏந்தி நின்றனர். முக்கோண சக்கரத்தில் சிறுவர்கள் 5 பேர் அகல்விளக்கு ஏந்தி நின்றனர். அறுங்கோண சக்கரத்தில் 5 சிறுமியர் மாவிளக்கு ஏந்தி நின்றனர். செவ்வக சக்கரத்தில் நடுத்தர வயது சுமங்கலிகள் 5 பேர் சாத்துக்குடி விளக்கு ஏந்தி நின்றனர். எண் கோன சக்கரத்தில் இளவயது சுமங்கலிகள் 5 பேர் ஓம் சக்தி விளக்கு ஏந்தி நின்றனர். வட்ட சக்கரத்தில் மூத்த சுமங்கலி பெண்கள் 3 பேர் ஆப்பிள் விளக்கு ஏந்தி நின்றனர். கருவறையில் நிறுவப்பட்டிருந்த அகண்டத்திற்கு சக்திபீட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தீபம் ஏற்றினார். அகண்ட தீபத்தை 1 கன்னிப்பெண், 2 இளம் சுமங்கலிகள் எடுத்து வந்தனர். சீர்வரிசை பொருட்கள் முன் செல்ல அனைத்து சக்கரங்களையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையில் தென்கிழக்கு மூலையில் நிறுவப்பட்டது. பொதுமக்கள், பக்தர்கள் அகண்ட தீபத்திற்கு முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 24 மணி நேரமும் சக்திபீடம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்நிகழ்ச்சியில், திருவிக நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, மகளிர் பத்மா, முன்னாள் வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா, நாகலாபுரம் மன்ற தலைவி விஜயலெட்சுமி, எட்டயபுரம் மன்றம் கண்ணா, சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், பொறுப்பாளர்கள் மந்திரம், பாலசுப்ரமணியன், மகளிர் அணி வசந்தா, யசோதா, செல்வி, அகிலா, வீரலெட்சுமி, முத்துலெட்சுமி, பரமேஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News