லாரி பட்டறைகளில் ஆயுத பூஜைகளுக்கான ஆயத்தப்பணிகள் தொடக்கம்
சங்ககிரி :லாரி பட்டறைகளில் ஆயுத பூஜைகளுக்கான ஆயத்தப்பணிகள் தொடக்கம்
ஆயுத பூஜை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி சங்ககிரியில் உள்ள லாரி பட்டறைகளில், உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இந்தியளவில் இயக்கப்பட்டு வருகின்றது .சங்ககிரியில் முக்கிய அங்கம் வகிக்கும் லாரி தொழிலையடுத்து சங்ககிரி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள், வரையறுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் தொடங்கி லாரிகளுக்கான சேஸ் வாங்குவது முதல் பாடி கட்டி வண்டியை சாலையில் இயக்குவது வரை பல்வேறு உதிரிபாகங்களுக்கு தனித்தனியாக வங்கிகள், வரையறுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன. அதனையடுத்து புதிதாக லாரிகளை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து சங்ககிரியில் லாரிகளை சார்ந்து லாரிகளில் பழுது நீக்குதல், பாடி கட்டுதல், வர்ணம் பூசுதல், எலக்ட்ரிகல், லாரிகளுக்கு கண்ணாடிகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டறைகள் தனித்தனியாக இயங்கின வருகின்றன. இப் பட்டறைகளில் ஒவ்வொரு வருடமும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. நிகழாண்டு ஆயுதப்பூஜை அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுதவதையொட்டி வியாழக்கிழமை காலை முதலே தொழிலாளர்கள் பட்டறைகளை தூய்மைப் படுத்தி அதற்கு சுண்ணாம்பு மற்றும் பல்வேறு வண்ண வர்ணங்கள் பூசியும், வருடம் முழுவதும் அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை சுத்தப்படுத்தி அதற்கு வர்ணம் அடித்தும் அவைகளை பூஜையில் வைத்து வழிபடுவதற்கு தயாராகி வருகின்றனர். மேலும் பட்டறைகளின் நுழைவு பகுதியில் வாழைமரங்கள், கரும்புகள், மற்றும் மின்னும் பல வண்ண கலர் காகிதங்களை கொண்டு தோரணங்கள் கட்டியும், ஓலி பெருக்கிகளை வைத்தும், அலங்கார மின்விளக்குகள் கட்டியும் வருகின்றனர். பட்டறைகளில் நடைபெறும் ஆயுத பூஜைகளையொட்டி வியாழக்கிழமை பிற்பகல் முதல் சங்ககிரி நகர் பகுதிக்கு வாழைமரங்கள், கரும்புகள், பூக்கள், பூசணிக்காய்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை வியாபாரிகள் வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு வந்து தயாராக வைத்துள்ளனர். மேலும் கடைக்காரர்கள் பட்டறை வாயிற்படிகளில் தொங்கவிடுவதற்கும், உள்பகுதிகளில் அலங்கரிப்பதற்கும் பல்வேறு விதமான வண்ண தோரணங்களை விலைக்கு வைத்துள்ளனர்.